

சென்னை:
ஜெயலலிதா மரணத்துக்குப்பின் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறி வந்தனர். இது தொடர்பாக சசிகலா மீதும் புகார் கூறினார்கள்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், லண்டன் டாக்டர் ஆகியோர் விளக்க அறிக்கை வெளியிட்டனர். இதேபோல் தமிழக அரசின் சுகாதாரத்துறையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி விளக்கம் வெளியிட்டது.
இந்த விளக்கத்தை ஒ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்கவில்லை. ஜெயலலிதா எந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அந்த நிலைமை ஏன் ஏற்பட்டது, முன்கூட்டியே உரிய சிகிச்சை அளிக்காதது ஏன் என்பன போன்ற காரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியையும் எடப்பாடி பழனிசாமி அணியையும் இணைக்க முயற்சி நடந்தது. அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் முக்கிய நிபந்தனை விதித்தார்.
நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் இழுபறிக்கு பின்பு ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்பிறகு அ.தி.மு.க. அணிகள் இணைந்தன. ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் மந்திரியானார்.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 1 மாதம் ஆன நிலையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. விசாரணை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதியும் தேர்வு செய்யப்படவில்லை.
அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பம் காரணமாகவே விசாரணை கமிஷன் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்ததற்கு டி.டி.வி.தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் 19 எம்.எல்.ஏ.க்களை தனியாக பித்து வைத்து அரசை கவிழ்ப்பேன் என்று மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர். கவர்னர் அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசை காப்பாற்றுவதில் இரு அணி தலைவர்களும் ஈடுபட்டு இருப்பதால் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபடவில்லை. இதனால்தான் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாக அமைச்சர்களுக்குள்ளும் முரண்பாடு உள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவால் அ.தி.மு.க. பொருளாளராக நியமிக்கப்பட்டபோது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறிவந்தார். இதேபோல் சசிகலா ஆதரவு அமைச்சர்களும் கூறி வந்தனர்.
அணிகள் இணைந்த பிறகு அவர்களது நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று மாற்றி கூறி வருகிறார்கள். சசிகலா குடும்பத்தை ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறார்கள். இது தினகரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதால் அவரும் நாள்தோறும் மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதுபோன்ற உள்கட்சி பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகுதான் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி முடிவு எடுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி அரசு வட்டாரத்தில் கேட்டபோது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பான கோப்பு தயாராகி வருவதாகவும் சம்பந்தப்பட்ட துறைக்கு இது தொடர்பான தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.