மத்திய அரசை கண்டித்து டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் மத்திய அரசை கண்டித்து டிடிவி.தினகரன் ஆதரவு அ.தி.மு.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசை கண்டித்து டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
Published on

அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாகவும் தினகரன் அறிவித்திருந்த நிலையில் தினகரனின் அ.தி.மு.க. (அம்மா அணி) நிர்வாகிகள் மதுரையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்காநத்தத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தினகரன் மீது பொய் வழக்கு போடும் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

உடனடியாக பொய் வழக்கை ரத்து செய்து தினகரனை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கர்நாடக அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 33 ஆண்டுகள் உற்ற தோழியாக, தாயாக இருந்து தியாகம் செய்தார் சசிகலா. அவரது தியாகத்தை மறந்தால் நாம் அ.தி.மு.க. காரனாக இருக்க முடியாது.

ஜெயலலிதா இறந்த பின்பு தாயில்லா பிள்ளையாக இருந்த நம்மை அரவணைத்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தியவர் சசிகலா. அவரது வழியில் துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் கட்சி பணியாற்றினார்.


அ.தி.முக. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு சசிகலாவும், தினகரனும் எடுத்த முயற்சிகள் நன்றி மறக்க கூடியது அல்ல. சசிகலாவும், தினகரனும் இல்லாவிட்டால் அ.தி.முக. அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க முடியாது.

எனவே மனிதனுக்கு நன்றி வேண்டும். ஆனால் நன்றி கெட்டவர்கள் பற்றி கவலை இல்லை. நல்ல உள்ளம் கொண்ட தொண்டர்கள் இங்கே கூடி இருக்கிறோம். அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொய் வழக்கில் இருந்து தினகரனை விடுதலை செய்ய வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com