தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம் நடைபெறுகிறது: டி.டி.வி.தினகரன்

ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் தற்போது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தகம் நடைபெறுவதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தம் நடைபெறுகிறது: டி.டி.வி.தினகரன்
Published on

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு காய்ச்சல் வந்த பிறகு தொண்டை வலி இன்னும் சரியாகவில்லை. உங்களை (பத்திரிகையாளர்கள்) பார்த்து 1 வாரம் ஆகிறது என்பதால் காரில் இருந்து இறங்கி வந்து உங்களை சந்திக்கிறேன்.

திருப்பூரில் நடக்கும் ஒரு திருமண விழாவுக்கு புறப்பட்டு செல்கிறேன். டாக்டர்கள் என்னை அதிகமாக பேசக்கூடாது என்று கூறியுள்ளனர்.

கேள்வி:- உங்களை ஆதரிக்கும் 19 எம்.எல்ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, உங்களை மிரட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கையா?

பதில்:- கடவுளை தவிர என்னை யாராலும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும் உண்மைக்கும்தான் நாங்கள் கட்டுப்பட்டவர்கள். இன்றைக்கு நடக்கிற தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையிலான யுத்தத்திலே தளபதிகளாக தளகர்த்தர்களாக அங்கே 19 பேர் சென்றிருக்கிறார்கள்.

பணம் கொடுத்து வாங்கி விடுவார்கள் என்பதற்காக அவர்கள் அங்கு செல்லவில்லை. 19 பேர் இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு தியாக உணர்வோடு அங்கே தங்கியிருக்கிறார்கள்.

இந்திய துணைக் கண்டமே இன்று தமிழகத்திலே நடந்து வருகின்ற இந்த சூழ்நிலையை உற்று கவனித்து வருகிறது.


தங்களின் கோரிக்கையை கவர்னர் விரைவில் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையில் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் அங்கே அமர்ந்திருக்கிறார்கள். சில அமைச்சர்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்றார்கள்.

இன்று எங்களுடன் இருக்கின்ற, தியாகத்துக்காக போராடுகின்ற, கட்சியை காப்பாற்ற போராடுகின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் நிச்சயம் பணம் பாயாது.

காரணம் அவர்கள் இன்றைக்கு அந்த அணியிலே இருந்திருந்தால் என்னென்ன பதவிகள் கிடைத்திருக்கும் என்பது தெரியும். என்னோடு இருப்பவர்கள்தான் தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள்.

இந்த இயக்கத்தை காக்க வேண்டும், பொதுச்செயலாளரை நீக்குவேன் என்று கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கட்சியை பொதுச்செயலாளர்தான் வழி நடத்த முடியும் என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்துவதற்காக, தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு உணர்த்துவதற்காக, உலகத்தில் எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ அவர்கள் தமிழகத்தில் நடைபெறுகிற அநீதியை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் அங்கே ஒன்றாக இருக்கிறார்களே தவிர யாருக்கும் பயந்து அல்ல.

அவர்களின் நியாயம் நிச்சயம் வெற்றி பெறும். அதற்கு கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உள்ளது.

கட்சியை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நல்ல நோக்கத்தோடு நான் அவர்களுடன் இணைந்து செயல்படுகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com