ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.
Published on

சங்கரன்கோவில்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடக்கம் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளி சாலைப்புதூரில் நடந்தது.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு சென்று, போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், பெரிய பாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிமாநிலங்களில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை அனுப்பக் கூடாது. கூடுதல் போலீசாரை அனுப்ப வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்துக்கு கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் போலீசாரை அனுப்பி இருந்தால், நேர்மையான போலீஸ் அதிகாரி பெரிய பாண்டியனை நாம் இழந்திருக்க வேண்டாம். கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகையை வழங்கும் என்று நம்புகிறேன்.

பெரியபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் பதிவான கைரேகைகளை ராஜஸ்தான் மாநில போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த அறிக்கை வெளியான பிறகுதான் பெரிய பாண்டியன் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இங்கு பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவே வந்தேன். எனவே மற்ற அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உறுதியாக வெற்றி பெறுவேன். தமிழகத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருக்கும்போது, கவர்னர் சென்று ஆய்வு செய்வது தவறானது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா கூறுவது பொய்யான தகவல்.

ஓ.பன்னீர்செல்வத்தை 2001-ல் இருந்துதான் ஜெயலலிதாவுக்கு தெரியும். 2 ஜி வழக்கு தீர்ப்பால் தமிழகத்தில் எந்தவித அரசியல் மாற்றமும் நிகழப்போவது இல்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போலீசாரும், உளவு துறையினரும் எங்களை மட்டுமே கண்காணித்தனர் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com