

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்னையில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி வந்த அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
அதன்பிறகு டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் உள்ள சில அமைச்சர்கள் கூறியதின் பேரில் நான் கட்சி பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். இந்த நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை. இரு அணிகளையும் இணைக்கும் விவகாரத்தில் அமைச்சர்களின் செயல்பாடு சரியில்லை.
தற்போது நான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன். அவரது ஆலோசனை பெற்று தொடர்ந்து நான் கட்சி பணி ஆற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ஓசூர் சென்ற அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி:- கட்சிப் பணியில் ஈடுபடுவேன் என்று கூறி இருக்கிறீர்கள். என்ன மாதிரி பணிகளில் ஈடுபடுவீர்கள்?
பதில்:- கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நான் சிறையில் இருந்தபோது தொண்டர்கள் எனக்கு கடிதம் எழுதி இருந்தனர். அ.தி.மு.க.வை பலப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன். அ.தி.மு.க. அம்மா அணி என்பது ஒன்றுதான். இந்த இயக்கம் தொண்டர்கள் பலத்தை நம்பி கட்டுக்கோப்பாக இருக்கிறது.
கேள்வி:- உங்களை சந்திக்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?
பதில்:- அமைச்சர்கள் ஏதோ பயம் காரணமாக இருக்கிறார்கள். அதனால் தான் என்னை விலகி இருக்க சொன்னார்கள். அவர்கள் என்னை சந்திக்காமல் இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். எனக்கு தொண்டர்களின் ஆதரவு உள்ளது.
கேள்வி:- நீங்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகிஇருப்பதால் உங்களுக்கு செல்வாக்கு இருப்பதாகவும், நீங்கள் முதல்-அமைச்சர் ஆக முயற்சி எடுப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறதே?
பதில்:- அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிறார். அவரது ஆட்சியில் நான் தலையிட விரும்பவில்லை. அவரை தொந்தரவு செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. என்னுடைய பணி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தான். இன்று சசிகலாவை சந்திக்க செல்கிறேன். அவரது ஆலோசனையை பெற்று கட்சி பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.