பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பரோலில் அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சிறையில் அவரை டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
Published on

பெங்களூர்:

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிறுநீரகம் முதலில் செயல் இழந்தது. பிறகு கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுநீரகம், கல்லீரல் தானமாகப் பெற்று நடராஜனுக்கு பொருத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை தேறி வருகிறது.

இதற்கிடையே பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா தனது கணவர் நடராஜனை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள தனக்கு 15 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று மனு செய்தார். ஆனால் அந்த மனுவுடன் உரிய ஆவணங்கள் இல்லாததால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் புதிய ஆவணங்களுடன் சசிகலா மீண்டும் மனு தாக்கல் செய்தார். சசிகலாவுக்கு பரோல் கொடுக்க தடை இல்லா சான்றிதழ் வழங்குமாறு நேற்று முன்தினம் இரவு கர்நாடக சிறைத்துறையில் இருந்து சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்துக்கு சென்னை மாநகர போலீசார் பதில் அனுப்பினார்கள். அதன் அடிப்படையில் இன்று சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அவரை அழைத்து வருவதற்காக டிடிவி தினகரன் இன்று சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். அங்கு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற அவருக்கு சசிகலாவை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சசிகலாவை சந்தித்து பேசினார். அவருடன் இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா, ராஜராஜன் ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர்.

இது ஒருபுறமிருக்க, சசிகலாவுக்கு பரோல் வழங்குவது குறித்து சென்னை போலீஸ் அளித்துள்ள நிபந்தனைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் சிறைத்துறை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com