

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. 3 அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைக்கப்பட்டன. ஆனால் டி.டி.வி. தினகரன் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் புதிய கட்சி தொடங்கி ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.
புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் நாளை (வியாழக்கிழமை)காலை நடைபெற உள்ளது. மேலூர்-அழகர் கோவில் ரோட்டில் எஸ்.பி.ஆர். திடலில் இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா திடலில் 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் தினகரன் பங்கேற்று புதிய அமைப்பின் பெயர், கொடியை அறிமுகம் செய்து பேசுகிறார்.
தினகரனை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது
முன்னதாக மதுரையில் இருந்து பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்க வரும் தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக கொடி தோரணங்கள் அமைத்து வரவேற்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.