

சென்னை:
பிரிந்து கிடந்த அ.தி.மு.க. அணிகள் இன்று இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் இழுபறி நீடிக்கிறது. அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன் திடீர் என்று அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அதன் பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதரவாளர்களை திரட்டி கட்சியிலும், ஆட்சியிலும் போர்க்கொடி உயர்த்தினார். மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி பலத்தை காட்டினார்.
அவர் பக்கம் 20 எம்.எல். ஏ.க்கள் வரை சாய்ந்தனர். ஆனால் அவர்களில் பலர் தினகரனை சந்தித்தாலும் அரசை கவிழ்க்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணிகள் இன்று முறைப்படி இணையும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதை அறிந்த டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி அடைந்தார். தனது ஆதரவாளர்களுடன் இன்று தனது பெசன்ட் நகர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், ஜக்கையன், முத்தையா, முருகன், கோதண்டபாணி, ரெங்கசாமி, தங்கதுரை, மாரியப்பன், கென்னடி, ஜெயந்தி உள்ளிட்ட 17 எம்.எல்.ஏ.க் களும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தோப்புவெங்கடாசலம், பார்த்திபன், சந்திரபிரபா ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தினகரனை ஆதரித்து வந்த இந்த 3 எம்.எல். ஏ.க்கள் தொடர்ந்து அவரை ஆதரிக்க தயக்கம் காட்டுவதாகவும் எனவே தான் இன்றைய தினகரன் கூட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்குமா? என்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது.
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதில் 17 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் உள்ளனர். இதனால் அரசுக்கு ஆதரவு 105 ஆக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க. இணைப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள 11 எம்.எல். ஏ.க்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 116 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் நிபந்தனையை ஏற்று எடப்பாடி பழனிசாமி அணியினர் சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினால் அதை எதிர்கொள்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சட்ட ரீதியாக எப்படி நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து கருத்து கேட்டு வருகிறார். இதில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.