

சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் நேற்று மதியம் தண்டையார்பேட்டை இரட்டைகுழி தெருவில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலையில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார். அப்போது அவருடன் வெற்றிவேல், முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செந்தமிழன் உள்பட ஆதரவாளர்கள் உடன் சென்றனர்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தாலும், நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசாங்கத்துடன் போராடி நிறைவேற்றி தருவேன்.
பெரியகுளம் தொகுதியில் நான் எம்.பி.யாக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்-அமைச்சர்) தம்பி வீட்டில் மாதம் 15 நாட்கள் தங்கி மக்கள் பணியாற்றினேன். அதுபோன்று ஆர்.கே.நகர் தொகுதியில் வாரத்தில் 3 நாட்கள் வெற்றிவேல் வீட்டில் தங்கி மக்கள் பணியாற்றுவேன்.
நான் இந்த தொகுதிக்கு வரமாட்டேன் என்று பொய் பிரசாரம் செய்தார்கள். ரூ.20 நோட்டை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார்கள். இது அவர்கள் தோல்விக்கு பிறகும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் நடந்துகொள்வதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மக்கள் பிரச்சினைகளுக்காக அமைச்சர்களை நீங்கள் அணுகும்போது, அவர்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருவார்களா?
பதில்:- கட்சி ரீதியில் அமைச்சர்களுக்கும், எங்களுக்கும் தகராறு இருக்கலாம். அது பங்காளி சண்டை. ஆனால் அதற்காக மக்கள் பிரச்சினைகளை அவர்கள் ஒதுக்கிவிட முடியாது. மக்கள் பிரச்சினை என்று வரும்போது அமைச்சர்கள் உரிய ஏற்பாட்டை செய்துதர வேண்டும். அப்படி அவர்கள் செய்துதராவிட்டால், அவர்களை எப்படி செய்துதர வைப்பது? என்று எனக்கு தெரியும். என் மீதான தனிப்பட்ட கோபத்தை காரணம் காட்டி, மக்கள் பிரச்சினைகளை அமைச்சர்கள் அணுகாமல் இருக்க முடியாது.
கேள்வி:- அ.தி.மு.க.வினர் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளாரே?
பதில்:- உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் வந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியை போன்று நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி.தினகரன் வார்டு வாரியாக வரும் நாட்களிலும் ஆர்.கே.நகர் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். #tamilnews