

தஞ்சை மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த அவர் 2-வது கட்டமாக இன்று காலை தெற்கு மாவட்ட தொகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இன்று முதல் 4 நாட்களுக்கு அவர் மக்களை சந்திக்கிறார்.
தினகரன் இன்று காலை தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக தையல் மிஷின், குக்கர், மாடு, கன்று ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் மத்திய பாரதிய ஜனதா அரசின் கிளை அலுவலகமாக எடப்பாடி அரசு செயல்படுகிறது.
2001-ல் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு? தற்போது அவருடைய சொத்தின் மதிப்பு எவ்வளவு? என்பது அவருக்கும் மட்டும் அல்ல, தஞ்சை பகுதி மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அவர் எப்படி அ.தி.மு.க. கட்சிக்குள் நுழைந்தார் என்பது எனக்கு தெரியும்.
மக்கள் அவர் மீது நம்பிக்கை இழந்ததாலேயே கடந்த முறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இனி எத்தனை முறை அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் தோற்பது உறுதி. மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனது வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாததால் எடப்பாடி அரசு ஆர்.கே. நகரில் மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வைத்துள்ளது.
தர்ம யுத்தம் டுபாக்கூர் யுத்தமாக செயலிழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் 3 மாதத்தில் எடப்பாடி அரசு கவிழும்.