

சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் கடந்த 3-ந்தேதி தனது தொகுதியில் காசிமேடு பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தார்.
பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடர், தனி கட்சி தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் என்று டி.டி.வி. தினகரன் பரபரப்பாக இருந்தார். இந்தநிலையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று அவர் கலந்து கொண்டார். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் உள்ள வாக்காளர்களை திறந்த ஜீப்பில் சென்று சந்தித்து நன்றி கூறினார்.
அப்போது அவருடன் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பஸ் கட்டண உயர்வு சாதாரண ஏழை-எளிய மக்கள், நடுத்தர மக்கள் என அனைவரையும் பாதித்து இருக்கிறது. எனவே அரசாங்கம் பிடிவாதம் பிடிக்காமல் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
நான் முதல்-அமைச்சரை ஒருமையில் பேசுவதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் தான் என்னை ஒருமையில் பேசி வருகிறார்கள். தினகரன் மாமியார் வீட்டுக்கு போவார் என்று சொன்னார்கள். இன்றைக்கு அவர்கள் தான் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. எந்த நேரத்திலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரலாம். இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் எங்களுக்கு ஒரே சின்னம் தேவைப்படுகிறது. எனவே நான் ஒரு தனிக்கட்சி தொடங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கும் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் எப்படி சேர முடியும்?.
அதனால் தான் அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று நாங்கள் தான் உண்மையான ஜெயலலிதாவின் வழித்தோன்றல்கள், வாரிசுகள் என்பதை நிருப்போம்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை எங்களுக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தாது. நம்பர் 1 யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். வருங்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். எனவே யாராலும் எங்களுக்கு பாதிப்பு வராது. தேர்தல் முடிவுகள் அதனை சொல்லும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews