சபரிமலை செல்ல பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்த திருப்தி தேசாய்

பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு கொச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
திருப்தி தேசாய்
திருப்தி தேசாய்
Published on

கொச்சி:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதேசமயம் முந்தைய உத்தரவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலை நீடிக்கிறது.

ஆனால், சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்தது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதையும் மீறி சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் தடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பினர். 

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் கேரளா வந்துள்ளார். திருப்தி தேசாய், பிந்து உள்பட7 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை கொச்சி விமான நிலையம் வந்தது. அவர்கள் கோட்டயம் வழியாக சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டால், நீதிமன்றத்தை நாட இருப்பதாக திருப்தி தேசாய் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “இன்று அரசியலைமைப்பு தினம் ஆகும். எங்களை யாராவது தடுத்து நிறுத்த முயற்சித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வோம். நான் சபரிமலை வருவது குறித்து ஏற்கனவே, நான் முதல் மந்திரி மற்றும் டிஜிபிக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். எனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். அரசு பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சபரிமலைக்கு செல்வோம்” என்றார். 

மேலும், சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்கக் கோரி கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்தி தேசாய் உள்ளிட்ட 7 பேர் மனு அளித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com