

நெல்லை:
திருச்சியில் இருந்து குமரி மாவட்டம் நித்திரவிளைக்கு கியாஸ் சிலிண்டர் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. லாரியை திருச்சி மணப்பாறையை சேர்ந்த சதீஷ்குமார்(33) ஓட்டி வந்தார். அந்த லாரி இன்று அதிகாலை நெல்லையை அடுத்த தாழையூத்து நான்கு வழிச்சாலையில் குறிச்சி குளம் அருகே வந்த போது டிரைவர் சதீஷ்குமார் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்றார்.
அப்போது அந்த வழியே ஒரு தண்ணீர் டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியை அம்பையை அடுத்த கீழ ஆம்பூரை சேர்ந்த கணேசன் (36) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் எதிர் பாராதவிதமாக டேங்கர் லாரி, சாலையோரம் நின்ற கியாஸ் சிலிண்டர்கள் லாரி மீது மோதியது.
இதனால் அந்த லாரி சாலை ஓரம் கவிழ்ந்தது. இதுபற்றி தாழையூத்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கவிழ்ந்த சிலிண்டர் லாரியை மீட்க பாளையில் இருந்து மீட்பு வாகனம் கொண்டுவரப்பட்டது. இதை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த பட்டுமாரி(40) என்பவர் ஓட்டி வந்தார்.
வாகனம் மூலமாக மீட்புபணி நடந்து கொண்டிருந்தது. அதனை சாலையோரமாக நின்று சப்-இன்ஸ்பெக்டர் அகிலா கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மதுரையில் இருந்து பழங்கள் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி மீட்பு பணியை பார்த்துக் கொண்டிருந்த அகிலா மற்றும் அங்கு நின்றவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் சப்இன்ஸ்பெக்டர் அகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கு நின்ற நாமக்கல் எல்லக்கவுண்டன்பட்டி சண்முகம்(35), திருச்சி தொட்டியத்தை சேர்ந்த சரவணன்(25) மற்றும் மீட்பு வாகன டிரைவர் பட்டுமாரி ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்துக்கு காரணமான பழ லோடு லாரி டிரைவர் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த மாதவன்(50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சப்-இன்ஸ்பெக்டர் அகிலா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியாக அகிலாவுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் மணலிவிளை ஆகும். இவரது கணவர் கார்த்திக் தென்காசியை சேர்ந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். கார்த்திக் தென்காசியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வந்தார். இதனால் அவர் தென்காசியில் தங்கியிருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அகிலா தாழையூத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் அகிலா ஏற்கனவே சுரண்டை, வீ.கே.புரம் போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி முதல் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். விபத்தில் பலியான அகிலா உடலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.