

திரிபுரா மாநிலம் அகர்தலா அருகே உள்ள ஆர்.கே.நகர் பகுதியில் துணை ராணுவ (திரிபுரா ஸ்டேட் ரைபிள்ஸ்) தலைமையகம் உள்ளது. இங்கு செய்தி சேகரிக்கச் சென்ற சுதிப் தத்தா போமிக் (50) என்ற பத்திரிகையாளர் நேற்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திரிபுரா ரைபிள்ஸ் படை வீரர் நந்து ரீங்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் மோமிக்கிற்கும், நந்து ரீங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஆத்திரமடைந்த ரீங், தனது சர்வீஸ் துப்பாக்கியால் போமிக்கை சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திரிபுரா ஆளுநர் ததகட்டா ராய்க்க்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சம்மன் அனுப்பி உள்ளார். அதில், பத்திரிகையாளர் கொலை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஆளுநர் இன்று காலை டெல்லி புறப்பட்டார்.
இதுபற்றி ஆளுநர் ராய் கூறும்போது, ‘பத்திரிகையாளர் தத்தா போமிக் கொலை தொடர்பாக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன்.
அரசு அறிக்கை மற்றும் காவல்துறை அறிக்கை தவிர ஊடக தகவல்களையும் ஆய்வு செய்துள்ளேன். போமிக்கின் குடும்பத்தினரிடமும் அறிக்கை பெற்றுள்ளேன்’ என்றார்.