குரோம்பேட்டையில் அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் இறுதிகட்ட பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களின் இறுதிகட்ட பேச்சு வார்த்தை இன்று குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று நடந்தது.
குரோம்பேட்டையில் அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் இறுதிகட்ட பேச்சுவார்த்தை
Published on

சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகின்றன.

2016 செப்டம்பர் மாதம் முதல் புதிய ஊதிய உடன்பாடு ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் ஒப்பந்தம் ஏற்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிடமும் போக்குவரத்து அமைச்சருடனும் நடந்த பேச்சு வார்த்தையில் இதுவரையில் எவ்வித முடிவும் ஏற்படவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்ததால் புதிய ஊதிய உயர்வு குறித்து எதுவும் அறிவிக்க இயலாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று இறுதிகட்ட பேச்சு வார்த்தை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று நடந்தது.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து முதன்மை செயலாளர் டேவிதார், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அண்ணா தொழிற்சங்க தலைவர் சின்னசாமி, பழனிசாமி, தொ.மு.ச. தலைவர் சண்முகம், பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. சவுந்தர்ராஜன், ஆறுமுகநயினார், ஏ.ஐ.டி.யூ.சி. லட்சுமணன், ஐ.என்.டி.யூ.சி. துரைராஜ், நாராயணசாமி, பாட்டாளி முத்துகுமார். நந்தகோபால் உள்ளிட்ட 46 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 நிர்ணயிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டன. இது தவிர அலவன்ஸ், பிற சலுகைகள், தினக்கூலி போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று தெரிகிறது. ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிப்போம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com