

சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர்.
அரசு தரப்பில் 2.44 மடங்கு சம்பள உயர்வு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் 2.57 மடங்கு சம்பள உயர்வு வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இரு தரப்பினருக்கும் இடையே 0.13 மடங்கு சம்பள உயர்வு வித்தியாசம் முரண்பாடாக நீடித்தது. சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக அரசு வக்கீலும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் வக்கீல்களும் வாதாடினார்கள். அப்போது தொழிலாளர்களின் சம்பள உயர்வு முரண்பாடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் பேச்சு நடத்த இரு தரப்பினரும் சம்மதித்தனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நலன் கருதி, வேலை நிறுத்தத்தை உடனே வாபஸ் பெறவும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பல்லவன் இல்லம் முன்பு திரண்டிருந்த தொழிலாளர்கள் மத்தியில் போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள் தங்கள் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றதாக கூறினார்கள். உடனே தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதன் பிறகு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தனர்.
அதன்படி தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் இன்று அதிகாலை பணிக்குத் திரும்பினார்கள். இதைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் அரசு பஸ்கள் ஓடத் தொடங்கின.
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து நீண்ட தூர பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. டவுன் பஸ்கள், மினி பஸ்களும் இன்று காலை வழக்கமான சேவையைத் தொடங்கின. காலை 8 மணிக்கெல்லாம் 8 போக்குவரத்துக் கழகங்களிலும் உள்ள அனைத்து பஸ்களும் முழுமையாக இயக்கப்பட்டன.
சென்னையில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்பட அனைத்து பேருந்து நிலையங்களும் கடந்த 8 தினங்களாக வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து பேருந்து நிலையங்கள் நிறுத்தங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக மாறின.
சென்னையில் இன்று மாநகர பேருந்துகள் முழுமையாக ஓடின. காலை முதலே பஸ்களில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. பஸ் தொழிலாளர்கள் போராட்டம் நீடித்ததால் பொதுமக்கள் மத்தியில் பஸ்கள் ஓடுமா என்ற சந்தேகம் நிலவியது. இதனால் கடந்த 9-ந்தேதி முன் பதிவு தொடங்குவதாக அறி விக்கப்பட்ட நிலையில், முன் பதிவு நடைபெறவில்லை.
என்றாலும் ஆன்-லைன் மூலம் சுமார் 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முன்பதிவு தொடங்கியது. ஏராளமானவர்கள் இன்று காலை கோயம்பேடுக்கு சென்று முன்பதிவு செய்தனர். கோயம்பேட்டில் உள்ள 9 கவுண்டர்களும் இதனால் நிரம்பி வழிந்தன. #tamilnews