

புதுடெல்லி:
ரெயில் கட்டணம் குறித்து மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோகாய்ன் டெல்லி மேல்-சபையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 0.68 சதவீதம் பயணிகள் கூடுதலாக ரெயில்களை பயன்படுத்தி இருக்கின்றனர்.
விழாக்காலங்கள், விடுமுறை தினங்களை முன்னிட்டு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு அதன் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. முதல் 30 சதவீத டிக்கெட்டுகள் வழக்கமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு பயணிகளின் வருகைக்கு ஏற்ப ஒவ்வொரு 10 சதவீத டிக்கெட்டுடன் அடுத்தடுத்த 10 சதவீத கட்டண உயர்வுடன் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தட்கல் கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ரெயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் மற்ற ரெயில்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது ரெயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.