

சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தங்க நகைகள் திருடு போவதாக வந்த புகாரின் பேரில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், ராதா கிருஷ்ணன், சாமன்னன், சிவகுருநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சென்ட்ரல், பேசின்பாலம் ரெயில் நிலையத்திலும், நிலையத்திற்கு வந்து செல்லும் ரெயில்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தின் நடைமேடை 15-ல் சந்தேகத்தின் பேரில் 5 பேர் நின்றனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் பலதிடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
விசாரணையில் அவர்கள் அரியானா மற்றும் டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. ரெயில் பயணிகள் பைகளில் உள்ள தங்க நகைகளை திருடி செல்வதை தொழிலாக செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் எடை கொண்ட தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். 16-வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 5 பேரையும் நீதிபதி இசக்கியப்பன் புழல் சிறையில் அடைக்க உத்தர விட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- ராஜேந்திரகுமார் (46), மதன்லால் (34), ராம்தியா (40), சுனீல்குமார் (34), சுரேஷ்குமார் (40).