மாறுவேடத்தில் வந்த போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் - வாகன சோதனையில் ருசிகர சம்பவம்

போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள தகவலை தெரிந்து கொள்ளலாம். #TrafficInspector
இன்ஸ்பெக்டர் பதி
இன்ஸ்பெக்டர் பதி
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளீனர் போல் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்றார்கள். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தனது சொந்த காரில் சென்று தனியாக வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறுவேடத்தில் ஓட்டி வந்த லாரியையும் அவர் தடுத்து நிறுத்தி டிரைவராக இருந்தவரிடம் மாமூல் கேட்டார். உடனே லாரியில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழே இறங்கினார்கள்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் பதி, ‘சரி நான் என்னுடைய காரிலேயே போலீஸ் நிலையத்துக்கு வருகிறேன்’ என்று கூறினார். அதை நம்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாங்கள் வந்த லாரியிலும், அவர்களின் பின்னால் பதி தன்னுடைய காரிலும் சத்தியமங்கலத்துக்கு சென்றுகொண்டு இருந்தனர்.

சிக்கரசம்பாளையம் தாண்டி கெஞ்சனூர் செல்லும் சாலை வந்தபோது, பதி திடீரென காரை கெஞ்சனூர் நோக்கி திருப்பினார். அதன்பின்னர் கார் மின்னல் வேகத்தில் கெஞ்சனூர் நோக்கி சென்றுவிட்டது. இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் லாரியில் காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார்கள். ஆனால் காரை தடுத்து நிறுத்த முடியவில்லை. வேகமாக சென்றபோது பதியின் கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். அந்த பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து வேலுச்சாமியை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். இன்ஸ்பெக்டர் பதி லஞ்ச ஒழிப்புதுறை போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், விபத்தை ஏற்படுத்தி வேலுச்சாமி படுகாயம் அடைந்ததற்காக சத்தியமங்கலம் போலீசாரும் பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். காரில் தப்பி ஓடிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை வலைவீசி தேடி வருகிறார்கள். #TrafficInspector

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com