தொழிற்சங்க போராட்டம்: கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை-கடைகள் அடைப்பு

மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை-கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்த காட்சி.
தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்த காட்சி.
Published on

திருவனந்தபுரம்:

நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்று நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய பென்‌ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் குதித்து உள்ளன.

சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப், ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட பல்வேறு தொழிற் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கேரளாவிலும் இன்று பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாலும் கேரளாவில் ஆளும் கட்சியாக கம்யூனிஸ்டு உள்ளதாலும் இந்த போராட்டம் கேரளாவில் தீவிரமாக நடைபெற்றது.

கேரளாவில் மாநில தலைநகரான திருவனந்தபுரம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் டீ கடைகள் கூட திறக்கப்பட வில்லை.

மேலும் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. நள்ளிரவு முதலே அனைத்து பஸ்களும் ஆங்காங்கே உள்ள அரசு பஸ் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன. மேலும் பஸ் டெப்போக்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

எப்போதும் பரபரப்பாக மக்கள் கூட்டத்துடன் காணப் படும் திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் ஓடாததால் பொது மக்கள் ரெயில்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களும் ஓடாததால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத் திற்கு செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

தற்போது சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பஸ், வேன் போன்ற வாகனங்களில் கேரளாவுக்கு இன்றும் வருகை தந்தனர்.

போராட்டத்தின் போது அய்யப்ப பக்தர்களின் வாகனங்களை யாரும் தடுக்கக்கூடாது என்று தொழிற் சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்து இருந்ததால் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் தங்குதடையின்றி சபரிமலைக்கு சென்றது.

தொழிற்சங்கங்களின் போராட்டத்தையொட்டி கேரளாவில் பல இடங்களில் மறியல் போராட்டமும் நடந்தது. ரெயில் தண்டவாளங்களில அமர்ந்தும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால் அவர்களை போலீசார் கைது செய்யும் சூழல் உருவானது. போராட்டம் காரணமாக பல ரெயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. அனைத்து மாவட் டங்களிலும் முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக கேரளாவில் இன்று நடக்க இருந்த பல்கலைகழக தேர்வு கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு, காலடி, கண்ணூர் போன்ற இடங்களில் செயல்படும் பல்கலைகழகங்கள் இன்று நடைபெறும் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி உள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு பஸ்கள் திருவனந்தபுரம் உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இன்று நடைபெறும் தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக தமிழக பஸ்கள் எதுவும் கேரளாவுக்கு இயக்கப்படவில்லை. மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com