அம்பை அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி

அம்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். கடந்த ஆண்டு நடந்த விபத்தில் மகன் இறந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அம்பை அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி
Published on

சிங்கை:

அம்பையை சேர்ந்தவர் குருசாமி (வயது 52). இவர் வீட்டில் வைத்து போட்டோவுக்கு பிரேம் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லெட்சுமி (48). நேற்று குருசாமி, மனைவியுடன் தனது மோட்டார் சைக்கிளில் அம்பை அருகே உள்ள வாகை குளத்தில் உள்ள வாகைபதி கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பினார். அவர் வாகைகுளம் விலக்கு பகுதியில் வந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் குருசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. லெட்சுமிக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் குருசாமியை மீட்டு அம்பை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான குருசாமியின் மகன் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த ஆண்டு சேரன்மகாதேவியில் நடந்த விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே விபத்தில் மகன் இறந்த நிலையில் தற்போது குருசாமி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com