இன்று தேசிய விவசாயிகள் தினம்

இன்று தேசிய விவசாயிகள் தினம்

முன்னாள் இந்திய பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான இன்று தேசிய விவசாயிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Published on

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயமாகும். நம் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் விவசாயிகள் கடன் தொல்லையாலும், சரியான வருமானம் இல்லாததாலும் விவசாயத்தை கைவிட மனமின்றி தற்கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல பிரதமர்கள் இருந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திற்குட்பட்ட நூர்பூரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தார். உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாள் பிரச்சனையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.

1979-ம் ஆண்டு ஜூலை மாதம், பல அரசியல் நெருக்கடிகளுக்கிடையே, நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்றார், சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.

'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com