

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பின் மீது தமிழ்நாட்டின் கருத்துக்களை வடிவமைப்பதற்காக முதல்- அமைச்சரின் தலைமையில் அமைச்சர்கள் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் 10.4.2018 அன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் கடந்த 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்திய காரணத்தினால், 15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளில் 1971-ம் ஆண்டைய மக்கள் தொகைக்குப் பதிலாக, 2011-ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பினைக் கருத்தில் கொள்ள வேண்டுமென்ற முடிவு தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
இது குறித்து ஏற்கெனவே முதல்-அமைச்சர், பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும், நிதி ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15-வது நிதி ஆணையத்தினை நேரில் சந்தித்து, 15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி அதனை திருத்திட கோரிக்கை மனுவினை அளித்து, நிதி ஆணையத்திடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது,
மேலும், இதுகுறித்து பாராளுமன்ற விவாதத்தின்போது தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தவிர, மத்திய நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு இது குறித்து விவாதிக்க வரும்போது, தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை மிக உறுதியாக எடுத்துரைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #15thFinanceCommission