தமிழக அரசு 4 பால் மாதிரிகளை மத்திய ஆய்வு கூடத்துக்கு அனுப்பியது

தமிழக அரசு புதிதாக 4 பால் மாதிரிகளை சேகரித்து புனே ஆய்வு கூடத்துக்கு அனுப்பி உள்ளனர். இது தொடர்பான அறிக்கை 2 வாரத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு 4 பால் மாதிரிகளை மத்திய ஆய்வு கூடத்துக்கு அனுப்பியது
Published on

தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பாலில் வி‌ஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள் கலக்கப்படுவதாகவும், இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புகார் கூறி இருந்தார்.

இதுசம்மந்தமாக ஏற்கனவே பால் மாதிரிகளை சேகரித்து புனேவில் உள்ள தேசிய உணவு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் இந்த ஆய்வு கூடத்தின் அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து பால் மாதிரி எதுவும் வரவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் இப்போது புதிதாக 4 பால் மாதிரிகளை சேகரித்து புனே ஆய்வு கூடத்துக்கு அனுப்பி உள்ளனர். இது சம்மந்தமாக புனே ஆய்வுகூட டைரக்டர் சுகாஷ்பக்ரே கூறியதாவது:-


கடந்த மாதம் 31-ந்தேதி மாதவரம் பால் பண்ணை மற்றும் பால் உற்பத்தி கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு 4 பால் மாதிரிகள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி கேட்டிருக்கிறார்கள்.

இந்த பால்களை நாங்கள் ஆய்வு செய்வோம். இதற்கு 2 வாரங்கள் வரை ஆகும். அதன்பிறகு இதன் தன்மை குறித்து அறிக்கை தயார் செய்யப்படும். பாலில் கொழுப்பு சத்து எவ்வளவு உள்ளது, ரசாயனங்கள் மற்றும் வேறு விதமான துணை பொருட்கள் அதில் கலந்துள்ளதா? என்பது பற்றி முழுமையாக ஆய்வு நடத்தப்படும். இதைத்தொடர்ந்து 20-ந்தேதி வாக்கில் நாங்கள் அறிக்கையை தமிழகத்திற்கு அனுப்பி வைப்போம்.

X

Maalai Malar
www.maalaimalar.com