டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய ஊழியர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து, போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், “குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய அளவில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளின் உதவியுடன் விடைத்தாள்களை திருத்தி மோசடி நடந்துள்ளது. உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட பணியாளர்கள் வரை அனைவருக்கும் இதில் தொடர்புள்ளது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்கவேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, “இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் புலன்விசாரணை முடிந்துவிட்டது. அதுதொடர்பான அறிக்கையும் ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. விரைவில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், “குரூப்-1 தேர்வு தொடர்பாக ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்துள்ளது. குரூப்-1 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்றால், அதற்கு அரசிடம் முன்அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதியை அரசு வழங்கியுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று வாதிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com