

விழுப்புரம்:
தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிவாரண தொகை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நிவாரண தொகை வழங்கியதில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
விழுப்புரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களில் இருந்து கடந்த 2013-14-ம் ஆண்டு காலகட்டத்தில் விபத்து நிவாரண நிதி பல மாதங்கள் ஆகியும் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. அந்த நிதி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது அந்த நிதியை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் பலர் வரவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு அந்த விபத்து நிவாரண தொகையை அதிகாரிகள் சிலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது.
விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ‘அ6’ பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய அன்புபாலன் என்பவர் விபத்து நிவாரண நிதியை தனது உறவினரின் வங்கி கணக்கில் செலுத்தி சுமார் ரூ.17 லட்சம் வரை மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அன்புபாலனை சஸ்பெண்டு செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உத்தரவிட்டார். சஸ்பெண்டு செய்யப்பட்ட அன்புபாலன் தற்போது உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்குட்பட்ட எறையூரில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசடியில் அதிகாரிகள் பலருக்கு தொடர்பிருப்பதாக கருதப்படுகிறது. எனவே அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews