

புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளது.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு, விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது, காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சில மணி நேரங்களுக்கு முன்பு கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.