

சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர் மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இதுவரை மாநிலம் முழுவதும் 585 நியாய விலைக்கடைகள் அம்மா மினி கூட்டுறவு சிறப்பு அங்காடிகளாக மேம்படுத்தப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் பொதுமக்களின் நலனுக்காக 5 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ், 2020-21-ம் நிதியாண்டிலும் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும்.
2020-ம் ஆண்டு ஜனவரியில் குடும்பம் ஒன்றிற்கு தலா ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்குவதற்காக அரசு ஏற்கனவே 2,363.13 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தம் ரூ.6,500 கோடி ரூபாய் உணவு மானியத்திற்காகவும், பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்திட கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ.400 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.