

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (14ந்தேதி) முதல் அனைத்து காய்கறி மற்றும் மளிகை, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்காலிகக் கடைகள் மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஊழியர்கள் ஆர்டரின் பேரில் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், வங்கி ஏ.டி.எம்.கள், எரிவாயு முகவர்கள், இறைச்சிக் கடைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புபவர்கள் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், பழங்கள் பேக்கரி பொருட்கள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கத்தில் நேரடியாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.