திருப்பூரில் காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

திருப்பூரில் காரில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் நேற்றிரவு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செல்லத்துரை(34), ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன்(40) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூர் மாநகர் பகுதிகளில் விற்றது தெரியவந்தது. தற்போதும் ஆந்திராவில் இருந்து டிராவல்ஸ் மூலம் அவினாசிக்கு வந்த கஞ்சாவை வாங்கி கொண்டு திருப்பூருக்கு காரில் வந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

இவர்களது வியாபாரத்துக்கு ரகு(30), ஹரி(24) ஆகியோர் உடந்தையாக இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 15 கிலோ கஞ்சா, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com