கோர்ட்டில் ஆஜராகாத ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

திருப்பூர் கோர்ட்டில் ஆஜராகாத ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
கோர்ட்டில் ஆஜராகாத ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
Published on

திருப்பூர்:

தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபாலின், சட்ட மன்ற அலுவலகம் அவினாசியில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அவினாசியை சேர்ந்த தி.மு.க.வினரான ஹரிதாஸ், மணிகண்டன், சிவபிரகாஷ், திராவிட வசந்தன் ஆகியோர், இந்த சட்டமன்ற அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவினாசி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கமலக்கண்ணன், பொது சொத்துக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்துதல் தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் ஆஜராகவில்லை.

இதனால் வழக்கில் ஆஜராகாமல் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மீது பிடிவாரண்டு பிறப்பித்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். தற்போது கமலக்கண்ணன், நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com