திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடு: தேவஸ்தான அதிகாரி

திருமலையைபோல், திருப்பதியிலும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது என அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறினார்.
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க ஏற்பாடு: தேவஸ்தான அதிகாரி
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு டிசம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை திருமலையில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் பக்தர்கள் மத்தியில் வெற்றி பெற்றது.

திருமலையில் வழங்கப்பட்ட தரிசன அனுமதி அட்டையை போல், திருப்பதியிலும் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதுகுறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில், முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திருமலையில் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கியதுபோல் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதியிலும் தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் மார்ச் மாதத்தில் இருந்து நிரந்தரம் செய்யப்படுகிறது. அதற்காக, திருப்பதி ரெயில் நிலையம், பஸ் நிலையம், அலிபிரி, விஷ்ணு நிவாசம், மாதவம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகளில் புதிதாக கவுண்ட்டர்கள் தொடங்கப்பட உள்ளது.

தேவஸ்தான என்ஜினீயர்கள் அதற்கானப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க கம்ப்யூட்டரில் சாப்ட்வோர், ஹார்டுவேர் பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

திருமலை, திருப்பதி நகரங்களை அழகுபடுத்த சாலை ஓரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. அதற்காக, ராஜமுந்திரியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து அழகு செடிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் முன் பதிவு செய்த 12 மணி நேரத்துக்குள் வந்து அறையை காலி செய்வோருக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தில் 50 சதவீத தொகை திருப்பி வழங்கப்படும். ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு 50 சதவீத கட்டணத்தை எப்படி வழங்குவது? என தேவஸ்தான நிதிதுறை அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார். #TamilNews #Tirupati

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com