

இதைத்தொடர்ந்து நந்தி முன்பு உள்ள பெரிய கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி” என்று பக்தி கோஷங்களை முழங்கினார்கள். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
விழாவையொட்டி இன்று இரவு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலாவும், இரவு 7 மணிக்கு சுவாமி, கற்பக விருட்ச வெள்ளி வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி,அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், காலை 8.45 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவையொட்டி தினமும் இரவு 8 மணிக்கு கோவிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பல்வேறு ஆன்மிக்க கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன்படி இன்று இரவு வாசுகி மனோகர் பக்தி சொற்பொழிவு, நாளை(வெள்ளிக்கிழமை) சுகி சிவம் வழங்கும் பக்தி சொற்பொழிவு, நாளை மறுநாள் சிவக்குமாரின் பக்தி சொற்பொழிவு,
2-ந்தேதி வீரமணி ராஜூவின் பக்தி இசை நிகழ்ச்சி, 3-ந்தேதி பேராசிரியர் ஞானசம்பந்தன் வழங்கும் சொல்லாடல் மன்றம், 4-ந்தேதி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமியின் இன்னிசை நிகழ்ச்சி, 5- ந்தேதி நித்யஸ்ரீ மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சி, 6-ந்தேதி மகதியின் இன்னிசை நிகழ்ச்சி, 7-ந்தேதி ஹரிஹரன் பாலாஜி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கின்றன.