துடியலூரில் டாஸ்மாக் பாரில் சப்ளையர்களை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

துடியலூரில் டாஸ்மாக் பாரில் சப்ளையர்களை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் கைது
தாக்குதல் கைது
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (32). இவர் துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த 3 வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அங்கிருந்த மற்ற குடிமகன்களிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலும் 2 வாலிபர்களை அங்கு வர சொல்லி தகராறில் ஈடுபட்டனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சப்ளையர்கள் மாயகிருஷ்ணன் (60) மற்றும் சுப்பிரமணி (54) ஆகியோர் அந்த வாலிபர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் சப்ளையர்களை அங்கு இருந்த இரும்பு கம்பி மற்றும் மரக் கட்டையால் தாக்கினர். படுகாயமடைந்த சப்ளையர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து பார் உரிமையாளர் இளையராஜா துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் (20), வெற்றிலை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த யாசர் (23), ராக்கி பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய பிரதீப் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com