தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்

தெலுங்கானாவில் பத்மாவதி படத்தை திரையிட்டால், திரையரங்குகளை கொளுத்துவோம் என தெலுங்கானா மாநில முதல்-மந்திரிக்கு ஐதராபாத் கோஷமகால் தொகுதி எம்.எல்.ஏ., ராஜாசிங் லோத் கடிதம் எழுதி உள்ளார்.
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
Published on

ஐதராபாத்:

சர்ச்சைக்குரிய இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் இந்தப் படத்தை திரையிட்டால், திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துவோம் என தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு ஐதராபாத் கோஷமகால் தொகுதி எம்.எல்.ஏ., ராஜாசிங் லோத் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், “ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தை பின்பற்றி பத்மாவதி படத்தை திரையிடக்கூடாது” என கூறி உள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்தப் பட விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கருத்து தெரிவித்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், “சஞ்சய் லீலா பன்சாலி இப்படி மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதை வழக்கமாக கொண்டு விட்டார்” என்று குறிப்பிட்டார்.

படக்குழுவினருக்கு அச்சுறுத்தல்கள் விடுப்பவர்களை விட சஞ்சய் லீலா பன்சாலி குறைவான குற்றத்தை செய்துவிட வில்லை என்றும் அவர் சாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com