தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- விசாரணைக்கு நேரில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நடிகர் ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை நடக்கும் முகாம் அலுவலகத்தை படத்தில் காணலாம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை நடக்கும் முகாம் அலுவலகத்தை படத்தில் காணலாம்.
Published on

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி ஏற்கனவே 18 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 445 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 630 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30.5.2018 அன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில், கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக வி‌ஷகிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். இந்த புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவருக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால் ரஜினிகாந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் 19-வது கட்ட விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை ஆணையர் அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. நேற்று 5 பேர் ஆஜராவதற்காக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் ஒருவர் மட்டும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) ரஜினிகாந்த் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ரஜினிகாந்தின் சார்பில் இளம்பாரதி உள்ளிட்ட 3 வக்கீல்கள் இன்று ஒருநபர் விசாரணை ஆணையத் தலைவர் அருணா ஜெகதீசன் முன்னிலையில் ஆஜராகினர்.

ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாதது குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து விசாரணை அதிகாரி எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளார்.

இதனை நாங்கள் ரஜினிகாந்த்திடம் கொடுப்போம். பின்னர் இதற்கான விளக்கத்தை எழுத்துபூர்வமாக ரஜினிகாந்த் வழங்குவார். அதனை நாங்கள் ஒருநபர் விசாரணை கமி‌ஷனிடம் ஒப்படைப்போம். எப்போது என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருநபர் ஆணையத்தின் 19-வது கட்ட விசாரணை வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com