

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை பாராட்டும் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இயங்கும் டபுள் டெக்கர் ரெயில் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என கூறும் பதிவு சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
மெல்லியதாகவும், ஆடம்பரமாக காட்சியளிக்கும் இந்த ரெயில் சிட்னிக்கு ஏற்றுமதி செய்யப்படும் 22 மேட் இன் இந்தியா ரெயில்களில் ஒன்று என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வைரல் பதிவுகள் உண்மை தானா என தேடியதில், 22 மேட் இன் இந்தியா கோச்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது.
எனினும், வைரல் புகைப்படத்தில் இருக்கும் ரெயில் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. ஃபேஸ்புக் தவிர இதுபற்றிய வீடியோ ஒன்றும் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் 'முதல்முறையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 22 மெட்ரோ ரெயில்கள் வெளிநாட்டில் இயக்கப்படுகின்றன', எனும் தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை தேடியபோது, அந்த வீடியோ செப்டம்பர் 22, 2018 இல் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவில் இயங்கும் டபுள் டெக்கர் மெட்ரோ ரெயில் எனும் தலைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
அல்ஸ்டாம் எனும் சர்வதேச நிறுவனம் 22 மேட் இன் இந்தியா மெட்ரோ ரெயில்களை சிட்னிக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்த ரெயில்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீ சிட்டி ஆலையில் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சிட்னி மெட்ரோ முழுமையாக தானியங்கி ரெயில்வே சேவையை மே 26 ஆம் தேதி துவங்கியது.
அந்த வகையில் பிரதமர் மோடியின் மேட் இன் இந்தியா திட்டத்தை பாராட்டும் வைரல் பதிவுகளில் எந்த உண்மையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பும் முன் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் மூலம் பலர் உயிரிழப்பு போன்ற பாதிப்புகளை சந்தித்திருக்கின்றனர்.