தேனி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- திருநாவுக்கரசர் பேட்டி

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை காட்டுத் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.#TheniForestFire #TheniFire
தேனி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்- திருநாவுக்கரசர் பேட்டி
Published on

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசிய பயணங்களில் கலந்து கொண்டேன். அது வெற்றிகரமாக அமைந்தது. அங்கு அவர் மக்களையும், அரசியல் கட்சி பிரமுகர்களையும் சந்தித்து பேசினார்.

அவருக்கு அமோகமாக வரவேற்பு கிடைத்தது. மக்கள் செல்வாக்கு இருப்பதும் கண்கூடாக தெரிந்தது.

ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறினார். இதன்மூலம் அவர் மனிதாபிமானமிக்க தலைவர் என்பதையும், பண்பாடு மிகுந்த வாரிசு என்பதையும் தெளிவாக காட்டுகிறது.

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் என ராகுல் கூறிய கருத்துக்கு அனைத்து தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ஜனதா தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் போன்றோர் எதிர்த்து இருக்கிறார்கள்.

ராகுல் காந்தியை பல தலைவர்கள் பாராட்டியது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் போருக்கு பின் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி தான் வீடுகட்டிக் கொடுத்தது. பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்னரும் அதற்கு முன்பும் ஒன்றும் செய்யவில்லை. எனவே இவர்கள் ராகுல்காந்தியை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.

தேனி குரங்கணி மலை காட்டுத் தீவிபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #TheniForestFire #TheniFire

X

Maalai Malar
www.maalaimalar.com