காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம்- திருநாவுக்கரசர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம்- திருநாவுக்கரசர்

ஏப்ரல் 1-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வார காலத்திற்குள் நதிநீர் பங்கீடு சட்டப் பிரிவு 6ஏ-யின்படி செயல்திட்டம் (ஸ்கீம்) உருவாக்கப்பட வேண்டுமென்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் படி ஏப்ரல் 1-ந்தேதியோடு ஆறுவார காலம் முடிவடைகிறது. இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கிறது.

ஆனால் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் கூற்றின்படி ஆறுவார காலத்திற்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என்று கூறிவருகிறார்கள். இதற்கு நான்கு மாநில அரசுகளோடு கலந்து பேசி செயல்திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று கூறுவது இல்லாத ஊருக்கு வழிதேடுகிற முயற்சியாகும்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் ‘ஸ்கீம்” என்று இருக்கிறதே தவிர, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

2007 -ல் வெளிவந்த நடுவர் மன்ற தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான நீர் பங்கீட்டு அளவை 14.25 டி.எம்.சி. குறைத்ததே தவிர, மற்றவை அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை மூடி மறைத்து விட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்று தான் கூறப்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறவில்லை என்று திரிபு வாதம் பேசுவது மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்கு செய்கிற மிகப்பெரிய துரோகமாகும்.


காவிரி பிரச்சனையைப் பொறுத்தவரை அரசியல் ஆதாய உள்நோக்கத்தோடு நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக 25 ஆண்டுகாலமாக நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் நிலைநாட்டப்பட்ட தமிழகத்தின் உரிமையை பறிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

காவிரி பிரச்சனையைப் பொறுத்தவரையில் காவிரி நடுவர்மன்றம் அமைப்பு, இடைக்கால தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது, 2007 இல் இறுதி தீர்ப்பு, இதை மத்திய அரசிதழில் வெளியிட்டது என அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாகவே தமிழகம் தமது உரிமைகளை நிலைநாட்டியிருக்கிறது.

இத்தகைய நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்பு தமிழகம் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை தொடர்ந்து பறித்து துரோகம் செய்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை தராமல் நாடாளுமன்றத்திற்கு வெளியே பெயரளவில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கண்துடைப்பு நாடகத்தை அ.தி.மு.க. நடத்தி வருகிறது. உண்மையிலேயே மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க அ.தி.மு.க. விரும்பியிருந்தால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதென முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால் நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அ.தி.மு.க. அத்தகைய அழுத்தத்தை தர, துணிவற்ற நிலையில் இருக்கிறது. மடியில் கனம் இருப்பதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை அ.தி.மு.க.வால் தடுக்க இயலவில்லை.

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், இதில் அ.தி.மு.க.வின் மெத்தனப் போக்கை கண்டித்தும் ஏப்ரல் 1-ந்தேதிக்குப் பிறகு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிற முயற்சியில் தமிழக காங்கிரஸ் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com