பா.ஜனதா தலைவர் பதவியை ரஜினி ஏற்க மாட்டார் - திருநாவுக்கரசர்

அகில இந்திய பாஜக தலைவர் பதவி கொடுத்தால் கூட நடிகர் ரஜினிகாந்த் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
Published on

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ப.சிதம்பரத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அ.தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனம் மத்திய பா.ஜ.க. அரசை சந்தோ‌ஷப்படுத்துவதற்குதான். எந்த விதத்திலாவது பா.ஜ.க.வை சந்தோ‌ஷப்படுத்த வேண்டும் எனவே தான் அவ்வாறெல்லாம் பேசுகின்றனர். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு வழிமொழிவதை அதிமுக அமைச்சர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்றியவர் ப.சிதம்பரம். வழக்குகள் போடப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. குற்றம் நிருபிக்கப்பட்டால் தான் குற்றவாளி.

நெடுஞ்சாலை சுங்க வரி உயர்த்தப்பட்டது கண்டனத்துக்குரியது. பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. வேலை வாய்ப்புகள் இல்லை. ஆட்டோமொபைல் போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. பொருளாதார வீழ்ச்சி நாடு முழுவதும் உள்ளது.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களிடம் இருந்து எதன் மூலம் பணம் பறிக்கலாம் என்ற முயற்சியை பாஜக அரசு மேற்கொள்கிறது. விளம்பரத்திற்காக அறிவிப்புகளை வெளியிடும் பா.ஜ.க, நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றத்திற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ரஜினிகாந்த் பா.ஜ.க.வின் உறுப்பினரே கிடையாது. ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாத நபரை தலைவராக்க முடியாது. பாஜகவில் அந்த அளவிற்கு உறுப்பினர் இல்லையா? தலைவர்கள் தட்டுப்பாடா?

அகில இந்திய பாஜக தலைவர் பதவி கொடுத்தால் கூட நடிகர் ரஜினிகாந்த் அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே. மாநில தலைவர் பதவியை எல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு முழுமையாக அமலுக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் அரசியல் தலைவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அங்கு சகஜநிலை திரும்பவில்லை. மத்திய அரசு அதை மறைக்க முயற்சி செய்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில், முறைப்படி சட்டரீதியாக நீதிமன்றம் மூலமாகவே அணுக வேண்டும். அதை விடுத்து வேண்டுகோளின் பேரிலோ செய்யப்படும் விடுதலை, தவறான முன்னுதாரணமாக அமையும். அதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. சட்டரீதியாக முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com