கடற்கரை காமராஜர் சிலை அருகே சிவாஜி சிலையை வைக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

சென்னை கடற்கரை சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவில் சிவாஜி சிலையை மாற்றி அமைக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்கரை காமராஜர் சிலை அருகே சிவாஜி சிலையை வைக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
Published on

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை, அதே சாலையிலேயே கடற்கரை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஜூலை. 19-ந்தேதி அன்று நான்கு வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிலை தற்போதுள்ள சாலை நடுவிலிருந்து அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், சிலையை காமராஜர் சாலையிலேயே சிலைகள் வரிசையில் நிறுவ எந்தத் தடையும் விதிக்கவில்லை. கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் உட்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம் அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளது. அதுபோல சிவாஜி கணேசனுக்கும், மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும். அதோடு தலைவர்கள், அறிஞர்களின் சிலைகள் பொதுமக்கள் பார்வையில் படும்படியான இடத்தில் அமைவதுதான் சிறப்பு. அதுமட்டுமின்றி, சிவாஜி கணேசனுக்கு சென்னையில் அமைந்துள்ள ஒரே சிலையாக இது உள்ளது.

எனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகர் திலகத்தின் சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும்போது, சென்னை, கடற்கரை சாலையிலேயே, காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்க வேண்டும். மணிமண்டபத்தில் நடிகர் திலகத்தின் வேறு சிலையை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றி, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த கலைத்தாயின் தவப்புதல்வனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com