சென்னையில் இயங்கிவரும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மூடக்கூடாது: திருமாவளவன் அறிக்கை

சென்னையில் இயங்கிவரும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மூடக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இயங்கிவரும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மூடக்கூடாது: திருமாவளவன் அறிக்கை
Published on

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்து விடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நடவடிக்கையை உடனே கைவிடவேண்டும்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவு திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களும் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதித்து அதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிகிறோம்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் செம்மொழி நிறுவனங்களையும்கூட ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களோடு இணைத்து விட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவெடுத்துள்ளது.

மத்திய பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்ற தகுதியை இழக்கும். அதன் நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் பல்கலைக்கழகத்திடம் சென்றுவிடும். பல்கலைக் கழக மானியக் குழுவின் மூலம் மத்தியப் பல்கலைக் கழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் அவர்கள் ஏதேனும் ஒதுக்கினால் அதைக் கொண்டு தான் அது இனிமேல் செயல்பட வேண்டும் என்ற நிலை உருவாகும்.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக தமிழறிஞர்கள் போராடி வந்தார்கள். திமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக 2004 -ம் ஆண்டு தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பிறகு அவர் முதலமைச்சராக இருந்தபோது தான் மைசூரில் இயங்கிவந்த செம்மொழி நிறுவனம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்படிப் போராடிப் பெற்ற உரிமையைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இன்றைய பாஜக அரசின் நடவடிக்கை உள்ளது. இதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

பா.ஜ.க. அரசு தனது தமிழ் விரோத நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் காக்க அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்பவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com