

சென்னை:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாட்டுக்கறிக்குத் தடை! மாடுகளைக் கறிக்கென விற்கவோ வாங்கவோ கூடாதென புதிய விதிகள்!
உழவு மாடுகள் இனி உழவுக்குப் பயன்படாது; கறவை மாடுகள் இனி பால் கறக்காது என்கிற நிலையில், அவை தாமாக இறக்கும் வரையில் வெறுமனே தீனி போட்டு அவற்றைப் பராமரிக்க இயலுமா? காளைகளாக இருந்தாலும் பசுக்களாக இருந்தாலும் அவை உழவுக்கும் கறவைக்கும் பயன்படாதபோது அவற்றை விற்பதுவாங்குவது என கைமாற்றி விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
மாடுவளர்ப்பு என்பது பல்வகை பயன்பாட்டுக்குரிய ஒரு பெருவணிகத் தொழிலாகும். உள்ளூர்ச் சந்தை, உள்நாட்டுச் சந்தை, மற்றும் வெளிநாட்டுச் சந்தை என இந்த வணிகம் விரிந்து பரந்ததாக உள்ளது. இப்பெரு வணிகம் பரந்துபட்ட உழைக்கும் வெகுமக்களின் தொழிலாக இருப்பதுதான் இன்றைய இந்தச் சிக்கல்களுக்கான அடிப்படையாகும். அதாவது, விவசாயம் சார்ந்த வெகுமக்களின் குடிசைத் தொழிலாக, வீட்டுக்கு வீடு மாடுவளர்ப்பது, விற்பது, வாங்குவது என நடைபெறும் இம்மாட்டு வணிகத்தில் கோடிக் கணக்கான குடும்பத்தினர் நேரடியாகவோ மறை முகமாகவோ பங்கேற்கின்றனர்; பயன்பெறுகின்றனர்!
இதன் வெளிப்படையான நோக்கம், ஒட்டுமொத்த உழவு மற்றும் கறவை மாடுகளின் மீது இரக்கம் காட்டுவதாக, இந்துக்களின் மதஉணர்வுகளைத் தூண்டி, அரசியல் ஆதாயம் பெறும் வகையில் வாக்குவங்கியை வலுப்படுத்துவதாகும்!
இதன் உள்ளீடான நோக்கம், காலம் காலமாக, வீடு வீடாக நடைபெற்றுவரும் வெகுமக்களின் மாடு வளர்ப்பை மெல்ல மெல்ல முடக்குவதாகும்!
அதாவது, இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது என்கிற போது, உழவு மாடு, வண்டி மாடு, கறவைமாடு வளர்ப் போரிடையே உருவாகும் அச்சம் தொடர்ந்து மாடுகளை வளர்ப்பதில் தேக்கத்தை ஏற் படுத்தி, நாளடைவில் அதனை முற்றிலும் முடக்கிவிடும்!
இதனால் காலம் காலமாய் பயன்பெற்று வந்த கோடிக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள், சிறுவணிகர்கள், இடைத்தரகர்கள், உள்ளூர்உள்நாட்டு சிறுமுதலாளிகள் போன்றவர்கள் அவ்வணிகத் தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுப் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
அதாவது, விவசாயம், இறைச்சி, பால், தோல் மற்றும் தீவனம் போன்றவற்றுக்கான மாட்டு வணிகச் சந்தைகளில் புரளும் பொருளாதாரத்தை, வெகுமக்கள் பகிர்ந்து கொண்ட சனநாயக நடைமுறையை அடியோடு ஒழித்து, ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களே அதனை ஒட்டுமொத்தமாகச் சுரண்டிக் கொழுக்கும்நிலை உருவாகும்.
எனவே, மோடி அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதித்திருப்பது பசு மற்றும் காளைகளின் மீதான கருணையினால் அல்ல; மாடுகள் தொடர்பான பெருவணிகம் முழுவதையும் கார்ப்பரேட்மயமாக்கும் வேட்கையினால்!
மோடி அரசின் இந்த வெகுமக்கள் விரோதப் போக்கை அம்பலப் படுத்துவோம்!
மாட்டுவணிகத்தைக் கார்ப்பரேட்மயமாக்கும் தீயமுயற்சியை முறியடிப் போம்!
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.