சசிகலா உறவினர் வீடுகளில் நடந்து வரும் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது: திருமாவளவன்

சசிகலா உறவினர் வீடுகளில் நடந்து வரும் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
சசிகலா உறவினர் வீடுகளில் நடந்து வரும் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது: திருமாவளவன்
Published on

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி பொறுப்பேற்ற போது கருப்பு பணத்தை ஒழிக்க போவதாகவும், வெளிநாட்டில் உள்ள பணத்தை மீட்க போவதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி. வரியையும் மக்கள் மீது திணித்துள்ளார். இந்த 2 நடவடிக்கைகளும் மிகப்பெரிய பேரிடராக அமைந்துள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி 3 விழுக்காடு சரிந்துள்ளது. சிறுதொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் யஷ்வந்த சின்ஹா, சுப்பிரமணிய சுவாமி ஆகியோரே மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.

எனவே பொருளாதார கொள்கையின் தோல்வியை ஒப்புக்கொண்டு தேச மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசில் பா.ஜ.க. தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகார வலிமையை பயன்படுத்தி தமிழக அரசில் தங்களையும் பினாமி அரசாக மாற்றி விட்டார்களோ? என்று எண்ண தோன்றுகிறது. இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள்.


தற்போது உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பை சேர்ந்த சசிகலா -தினகரன் உறவினர்கள் வீடுகள், ஜெயா டி.வி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை ஒரு அதிகாரம் உள்ள அமைப்பு. வரி ஏய்ப்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் தங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வருமான வரித்துறை பயன்படுத்துவது அந்த துறையை சீர் குலைப்பதாகும். எனவே தற்போதைய நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனை பா.ஜ.க. கைவிடுவது நல்லது. மக்களை திசை திருப்ப, ஆட்சி அதிகாரத்தின் தோல்வியை மறைக்க மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் அதனை வெற்றிகரமாக நடத்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை தமிழக அரசு கைவிட வேண்டும். அச்சுறுத்தல் காரணமாக மத்திய பா.ஜனதா அரசை விமர்சிக்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது.


பிரதமர் நரேந்திரமோடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தது இயல்பான ஒன்றுதான். இதற்கும் 2ஜி வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பா.ஜ.க. கூறியுள்ளது. அது உண்மையென்றால் நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க.வும் இந்த சந்திப்பில் எந்த அரசியலும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தெய்வசிகாமணி தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்பேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com