கதாநாயகர்களாக நடித்தவர்கள் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்- திருமாவளவன்

தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவில் நடித்தால் முதலமைச்சராகி விடலாம் என்ற எண்ணம் உள்ளதாக குடியாத்தத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
கதாநாயகர்களாக நடித்தவர்கள் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்- திருமாவளவன்
Published on

குடியாத்தம்:

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தை சார்பில் நடந்த சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கோவில்களில் பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் என சட்டத்தை இயக்க வலியுறுத்தி மகளிரை வைத்து மாநாடு நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். தமிழக அரசியலில் குழப்பமான சூழ்நிலை உள்ளது. இந்திய அரசியல் நெருக்கடியான நிலையில் உள்ளது.

தமிழகத்தில் பலர் முதல்-அமைச்சர் கனவில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவில் நடித்தால் முதல்- அமைச்சராகி விடலாம் என்ற எண்ணம் உள்ளது. இதுபோல் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

ரஜினி, கமலுக்கு ரோல் மாடல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. எனக்கு ரோல்மாடல் அம்பேத்கர், பெரியார். அவர்கள் அறிவை விதைத்து சமூக புரட்சியை உருவாக்கினார்கள். எங்களது இறுதி இலக்கு ஆட்சி அதிகாரம்தான்.

அரசியலமைப்பு சட்டம்தான் நாட்டை பாதுகாத்து கொண்டிருக்கிறது. அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என அதற்கு எதிரான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுத்து வருகிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க முடியாது.

தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என பதிவிட்ட எச்.ராஜா, தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக கொந்தளித்தவுடன் பின்வாங்கி விட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அளவில் அரசியலை பார்க்கவில்லை, இந்திய அளவில் அரசியலை பார்க்கிறோம். மீண்டும் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com