

சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்பன பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் மெத்தன நடவடிக்கைகளை கண்டித்து அவர் கோஷங்களை எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவன் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகள் இன்னும் வேகமாக ஈடுபட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை தொடர்ந்து பன்றிக் காய்ச்சலும் பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாததே காரணம்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இது கொள்ளை நோய் போல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவலை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு ரத்த பரிசோதனை செய்ய கிராமங்கள் தோறும் ஆய்வகங்கள் அமைக்கப்பட வேண்டும். 1897 கொள்ளை நோய் சட்டப்படி மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்ட பந்தல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திருமாவளவன் நிலவேம்பு கசாயத்தை குடித்து விட்டு, பொது மக்களுக்கும் வினியோகம் செய்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஏ.டி.பாவரசு, உஞ்சைஅரசன், வன்னியரசு, பாலாஜி, பாவலன், மாவட்ட செயலாளர்கள் வி.கே.ஆதவன், ரவிசங்கர், செல்லத்துரை, அம்பேத் வளவன், அன்புசெழியன், செல்வம் மற்றும் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.