

தேனியை அடுத்த வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள் (வயது 95). இவரது கணவர் வரதராஜபெருமாள் தேவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாமியாராக சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து பாப்பாத்தியம்மாள் கடந்த 20 வருடங்களாக தனது மருமகளான மாரியம்மாளின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று பாப்பாத்தியம்மாள் இறந்துவிட்டார். அவரது உடலை இறுதிச்சடங்கு செய்வதற்கு அவரது உறவினர்கள் தயார் செய்து கொண்டு இருந்தனர்.
மத்திய அரசு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தெரியாமல் பாப்பாத்தியம்மாள் தனது பேரக்குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தது உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் உறவினர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை அவரது உடல் மீது பரப்பி ஒப்பாரி வைத்து அழுதனர்.