சென்னையில் கால்வாயில் குப்பை கொட்டுபவர்களை கைது செய்ய நடவடிக்கை

சென்னையில் கால்வாய்களில் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கால்வாயில் குப்பை கொட்டுபவர்களை கைது செய்ய நடவடிக்கை
Published on

சென்னை:

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் மழை நீர் செல்லும் கால்வாய்களை மேம்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிரட்டிய மழையும் மக்களை வெள்ள பீதியில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து சென்னையில் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட மழை நீர் வடிகால் கால்வாய்கள் தற்போது தூர்வாரப்பட்டுள்ளன. அதில் இருந்து டன் கணக்கில் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

பெரும்பாலான கால்வாய்களில் பெரிய பெரிய மரக்கிளைகளும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளன. இப்படி அகற்றப்பட்ட கழிகள் பல இடங்களில் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று கொட்டப்படும் கழிவு பொருட்கள் காரணமாகவே கால்வாய்கள் மிதமான மழைக்கே தாக்குப் பிடிக்காமல் நிரம்பி விடுகின்றன.

இதனை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கால்வாய்களில் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது குப்பைகளை சேகரித்து வைக்காமல் தெருக்களில் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மழை நீர் செல்லும் கால்வாய்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாய உள்ளது.

மாநகராட்சி சார்பில் உரிய புகார் அளிக்கும் பட்சத்தில் இந்திய தண்டனை சட்டம் 336-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படும் நபரை கைது செய்து 3 மாதம் சிறையில் அடைக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கால்வாய்களில் குப்பை கழிவுகள் கொட்டும் விவகாரத்தில் போலீசார் நேரடியாக தலையிட முடியாது. மாநகராட்சி சார்பில் புகார் அளித்தால் அதுபற்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com