வடசேரி பஸ் நிலையத்தில் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளில் குறைவானவர்களே வருகை தந்தனர்.
வடசேரி தற்காலிக சந்தையில் கடைகள் செயல்பட தொடங்கியதை படத்தில் காணலாம்.
வடசேரி தற்காலிக சந்தையில் கடைகள் செயல்பட தொடங்கியதை படத்தில் காணலாம்.
Published on

நாகர்கோவில்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நெருக்கமாக கடைகள் அமைந்துள்ள வடசேரி சந்தை மூடப்பட்டு, வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டது. அங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த சந்தையில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், போலீசார், ஊர்க்காவல்படையினர் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வடசேரி பஸ் நிலைய தற்காலிக சந்தை மூடப்பட்டது.

இந்தநிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் வடசேரி பஸ் நிலையத்தில் மீண்டும் சந்தையை திறக்க நடவடிக்கை எடுத்தார். தற்காலிக சந்தையில் கடை அமைத்திருந்த வடசேரி சந்தை வியாபாரிகள் மீண்டும் கடைகள் அமைத்துக்கொள்ள இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மொத்தம் 192 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் 10 அடி அகலம், 10 அடி நீளம் என்ற அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒவ்வொரு கடைக்கும் இடையே இடைவெளி விடப்பட்டது.

வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்ய கடைகள் அமைத்தனர். முதல் நாளான நேற்று சுமார் 50 கடைக்காரர்கள் விற்பனையை தொடங்கினர். இதன்மூலம் நேற்று முதல் வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது.

மற்ற கடைக்காரர்கள் விற்பனைக்காக பொருட்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர். முதல்நாளான நேற்று மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

பொருட்கள் வாங்க வந்தவர்களை, வியாபாரிகள் சார்பில் பணியமர்த்தப்பட்டு இருந்த பணியாளர்கள் பஸ் நிலைய நுழைவு வாயிலிலேயே தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னர்தான் சந்தைக்குள் செல்ல அனுமதித்தனர். மேலும் அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசரும் வழங்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை முதல் தற்காலிக சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் முழுமையாக செயல்படும் என்றும், மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com