ஆதார் இணைக்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது: அரசியல் சாசன அமர்வு உத்தரவு

அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆதார் இணைக்க வேண்டும் என  கட்டாயப்படுத்த கூடாது: அரசியல் சாசன அமர்வு உத்தரவு
Published on

புதுடெல்லி:

வங்கிக்கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்க பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், காப்பீடு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் ஆதார் திட்டம், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதல்ல என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடுத்து உள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் விசாரிக்க உள்ளது.

இதற்கிடையே அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கி இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்துள்ளனர்.

இந்த வழக்குகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வின் முன் விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்த அமர்வின் முன் மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவற்றில் ஆதார் எண் இணைப்பதற்கு டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் என்பதை 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. அதே நேரத்தில் செல்போன் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 6-ந் தேதி என்பதில் இருந்து நீட்டிக்கப்படுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில், அரசின் திட்டங்களில் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முடித்தது.

இந்நிலையில், ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். மேலும், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com